கோலாலம்பூர், டிசம்பர்.28-
ஆஸ்டன் மார்டின், ஃபெராரி, லம்போர்கினி எனப் பகட்டான 915 சொகுசு கார்களைப் பறிமுதல் செய்து, மலேசிய சாலை போக்குவரத்து துறை ஜேபிஜே தற்போது நாடு முழுவதும் அதிரடி வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது. 300 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் கார் வாங்க முடிந்தவர்களுக்கு, 2 ஆயிரம் ரிங்கிட் சாலை வரி செலுத்த முடியவில்லையா?" எனக் கேள்வி எழுப்பிய சாலைப் போக்குவரத்துத் துறையின் செயலாக்க இயக்குநர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹசான், 'மறந்துவிட்டோம்' என மழுப்பலாகக் காரணம் கூறிய கோடீஸ்வர உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வரி செலுத்தாமல் போக்கு காட்டும் மேலும் ஆயிரக்கணக்கான சொகுசு வாகனங்கள் அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்கியுள்ள நிலையில், அவை எப்போது வேண்டுமானாலும் சாலையில் தடுத்து வைத்துப் பறிமுதல் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகச் சாலையில் உலா வரும் வாகனங்களுக்கு இனி இடமே இல்லை எனத் தெரிவித்துள்ள முஹமட் கிஃப்லி, உரிமையாளர்கள் உடனடியாகத் தங்கள் காப்பீட்டையும் சாலை வரியையும் புதுப்பிக்குமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.








