பெந்தோங், ஜனவரி.19-
பகாங், பெந்தோங், Central Spine Road சாலையில் நேற்று இரவு நடந்த இரண்டு வாகன மோதலில், காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட 19 வயது மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ரவூப் நோக்கிச் செல்லும் சாலையின் 19.4-வது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த போது மழை பெய்து கொண்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் காஹார் தெரிவித்தார்.
கோலாலம்பூரிலிருந்து ரவூப் நோக்கிச் சென்ற அந்தக் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கால்வாயில் மோதிச் சரிந்தது. இதனால் காரில் பயணம் செய்த 19 வயது மாணவி வெளியே தூக்கி வீசப்பட்டார். அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரை ஓட்டிச் சென்ற 20 வயது வெளிநாட்டு இளைஞர் சிறு காயங்களுடன் தப்பினார். அவர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இவர்கள் இருவரும் உயர்க்கல்வி நிறுவன மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று ஸைஹாம் காஹார் குறிப்பிட்டார்.








