ஜார்ஜ்டவுன், நவம்பர்.17-
இவ்வருடம் எஸ்.பி.எம் எழுதவிருந்த ST XAVIERS INSTITUTION மாணவர் 17 வயது ஜேசன் லீ கடந்த வாரம் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

அந்தக் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்ட ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மற்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் இருவரும் ஆறுதல் கூறும் வகையில் அந்தக் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தனர்.
இவர்கள் ஜெலுத்தோங்கின் சுங்கை பினாங்கில் உள்ள சம்மர் பிளேஸில் வசிக்கின்றனர். அம்மாணவனின் தந்தை லீ ஸென் ஸெங், தாயார் லியூ கிங் லி குடும்பத்திற்கு இரு எம்.பி.க்களும் ஆறுதல் தெரிவித்தனர்.

ராயர் கூறுகையில், இத்தம்பதியரின் இழப்பை ஈடுகட்ட முடியாது. இருப்பினும் அவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் துக்கச் செலவுகளை ஈடுகட்ட என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளேன். அதோடு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் கண்ட சாட்சிகள் அனைவரும் விசாரணைகளில் உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை முழுமையாகவும் விரைவாகவும் விசாரிக்குமாறு காவல் துறையினரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று ராயர் கூறினார்.








