கோலாலம்பூர், டிசம்பர்.13-
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-ஆனது, இணைய பயனர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
என்றாலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமையில் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல்வாதியும், சமூக ஆர்வலருமான டான் ஶ்ரீ லீ லாம் தை கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் இணையக் குற்றங்களுக்கு மத்தியில் இந்தச் சட்டமானது சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
அதே வேளையில், டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பானதாகவும் பொறுப்புணர்வுடனும் மாற்றுவதற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை இந்தச் சட்டமானது பிரதிபலிப்பதாகவும் லீ லாம் தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இளம் பயனர்களிடையே இணையப் பகடிவதை, டிஜிட்டல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








