வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் அம்னோவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மாநில இடைக்கால மந்திரிபெசாரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.
சிரம்பானில் நேற்று இரவு நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திர தொடக்க விழாவில் உரையாற்றிய அமினுடின், மாநில அரசாங்கத்திற்கு அம்னோ செய்த துரோகமே மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் பாஸ் தலைவர்களுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று, தம்மை மந்திரி பெசார் பதவியிலிருந்து அகற்றுவதற்காக பெரிக்காத்தான் நேஷனலும், அம்னோவும் முன்கூட்டியே ஆலோசனைகள் நடத்தியதை அம்பலப்படுத்தியதாக அமினுடின் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தங்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் மீது மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 80 விழுக்காடு வாக்குபதிவை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரோகம் இழைத்த அம்னோவை தண்டிக்கும் அதிகாரம் மக்களுக்கு மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமினுடின், வரும் தேர்தலான மாநில அரசியலின் திசையை தீர்மானிக்கும் முக்கியமான தருணம் என்றும் விவரித்துள்ளார்.








