மலேசியாவிற்கு தமது கணவருடன் பயணம் மேற்கொண்டு , பினாங்கில் தங்கியிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஓர் ஆஸ்திரேலியப் பிரஜையான ஆனா ஜென்கின்ஸ் என்ற அன்னப்பூரணியின் மரணமானது, தலையில் பலம் கொண்டு தாக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய தடயவியல் ஆய்வகம் கூறுகிறது.
மலேசியாவில் பாரிட் புந்தாரில் பிறந்து வளர்ந்து, ஆஸ்திரேலியாவில் குடியேறியவரான அன்னப்பூரணியின் தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் அதிர்ச்சியில் அவர் இறந்துள்ளார் என்று தடயவியல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த மாது எவ்வாறு மரணம் அடைந்தார் என்பதை துல்லியமாக கண்டு பிடிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் அல்லது சாட்சிகள் இல்லை என்று பினாங்கு மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த இருந்த நிலையில் ஆஸ்திரேலிய தடயவில் ஆய்வியல் பிரிவு, 65 வயதான அந்த மாது தலையில் ஏற்பட்ட அடியினால் மரணம் அடைந்துள்ளார் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
அப்பட்டமான அதிர்ச்சியில் அந்த மாது மரணம் அடைந்ததாக ஆஸ்திரேலிய தடயவியல் நிபுணர் எல்லி சிம்ப்சன்ஸ் தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்த போது காணாமல் போன, அன்னப்பூரணியின் எலும்புக்கூடு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு, ஸ்கோட்லென் ரோட் சாலையில் ஒரு பழைய பங்களா வீட்டுக்கு அருகில் புதரில் கண்டு பிடிக்கப்பட்டது.








