பாங்கி, நவம்பர்.04-
பாங்கியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடு ஒன்றில், Anabolic steroids என்ற ஊக்க மருந்துகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் சுகாதாரத் துறை மற்றும் மருந்தக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை கிள்ளான் உட்பட 5 இடங்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில், சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில், 500-க்கும் அதிகமான சட்டவிரோத மருந்துப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள், தசைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஊக்க மருந்துகளாகப் பயன்படுத்தப்படுபவை என்று சிலாங்கூர் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளில், தயாரிக்கப்பட்டுள்ள அம்மருந்துகள், சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.








