ஜோகூர் பாரு, டிசம்பர்.30-
ஜோகூரின் தென் பகுதிகள் மற்றும் இஸ்கண்டார் பகுதிகளில், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்த சௌதெர்ன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இந்த ரயில் சேவையை, மொத்தமாக 2.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி KTMB அறிவித்துள்ளது.
இந்த ரயில் சேவையானது தினசரி ஆறு முறை இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 800 முதல் 1,000 பயணிகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்தி வந்ததாக கேடிஎம்பி தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அஃப்ஸார் ஸாகாரியா தெரிவித்துள்ளார்.
சிகாமட், குளுவாங், லாபிஸ், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு போன்ற தென் பகுதியிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர நகரங்களை இணைப்பதால் இந்த ரயில் சேவை நிறுத்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் பாரு முதல் கிம்மாஸ் வரையிலான மின்மயமாக்கப்பட்ட இரட்டை இரயில் பாதை திட்டமான இடிஎஸ் இறுதிக் கட்ட சோதனைகள் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.








