ஜார்ஜ்டவுன், ஜூலை.25-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாம் பிரசவித்த பெண் சிசுவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கல்லூரி மாணவிக்கு எதிரான தண்டனையைப் பினாங்கு உயர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
23 வயதான எம். சந்தியா என்ற அந்தப் பெண்ணுக்கு எதிரான கொலை வழக்கில் தீர்ப்பை வழங்குவதற்கான புதிய தேதியை நீதிபதி ரோஃபியா முகமட் நிர்ணயித்தார்.
பினாங்கு தீமோர் லாவுட் சமூக நல இலாகா அதிகாரி முகமட் ஸாஹிர் ஹாருன் சமர்ப்பித்த அறிக்கையின் உள்ளடக்கம் அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் வாதத் தொகுப்புகளைச் செவிமடுத்த பின்னர் தீர்ப்பளிப்பதற்கு தமக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக நீதிபதி ரோஃபியா முகமட் தெரிவித்தார்.
இந்த வழக்கின் தன்மையை ஆராய்ந்து பார்த்ததில் முடிவு எடுக்க சற்று கடினமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே இதற்கான தீர்ப்பு நாளாக வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அந்த முன்னாள் மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர், சம்பவம் நிகழும் போது அந்த முன்னாள் மாணவிக்கு 18 வயது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
தனது காதலுடன் இணைந்திருந்த வேளையில் திருமணம் ஆகாமலேயே பிரசவித்த பெண் சிசுவை அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் 13 ஆவது மாடியிலிருந்து கீழே தூக்கி எறிந்து கொன்றதாக அந்த முன்னாள் கல்லூரி மாணவி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சந்தியா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் தேதி காலையில் பினாங்கு, ஆயர் ஈத்தாம், பண்டார் பாருவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணும் அவரின் காதலனும் கைது செய்யப்பட்டனர்.








