பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இந்த உரையாடலில், இரு நாட்டுத் தலைவர்களும் ரமலான் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதுடன், மேற்காசியாவில் நிலவி வரும் தற்போதைய நிலைமை குறித்தும் விவாதித்தனர்.
இது தொடர்பாக ‘X’ சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அன்வாருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு மலேசிய மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்பேச்சுவார்த்தையில், மேற்காசியாவில் உருவாகியுள்ள “மிகவும் கவலைக்கிடமான நிலைமை” குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், போர் பதற்றத்தை குறைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்திய இரு தலைவர்களும், உரையாடல் மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குண்டுவீச்சு மற்றும் படுகொலைச் செயல்களை மலேசியா வன்மையாகக் கண்டிக்கும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக அன்வார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் BRICS உள்ளிட்ட அனைத்துலக மேடைகளில், மலேசியா மற்றும் இந்தியா இணைந்து ஒருங்கிணைந்த குரலை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.








