சிரம்பான், டிசம்பர்.11-
மது போதையில் வாகனத்தைச் செலுத்தி கடமையில் இருந்த போலீஸ்காரருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 26 வயது லோரி உதவியாளருக்கு எதிரான வழக்கு விசாரணையை சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் ஜனவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான தடயவியல் அறிக்கை மற்றும் ரகசிய கேமரா பதிவு இன்னும் தயாராகவில்லை என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் P. ரூபிணி தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் நூருல் ஸுயின் தல்ஹா அறிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லோரி உதவியாளரான K. கெல்வின் ராஜ், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அதிகாலை 1.25 மணியளவில் சிரம்பான் அருகில் ஜாலான் தெமியாங்-கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 23 வயது நாயிம் முல்லா முகமட் அஃப்பெண்டி என்ற போலீஸ்காரரைக் காரினால் மோதித் தள்ளி மரணம் விளைவித்ததாக கெள்வின் ராஜ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
உயிரிழந்த போலீஸ்காரர் ஜாலான் கேம்பெல் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் ஆவார்.








