கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
சபா, பாபாரில் முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா இறப்பு தொடர்பில் மரண விசாரணை நடத்துவதற்குச் சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது.
13 வயது மாணவியின் மரணம் தொடர்பில் போலீஸ் துறை நடத்திய விசாரணை அறிக்கை மீது நடத்தப்பட்ட மறு ஆய்வுக்குப் பின்னர் அந்த அந்த மாணவியின் இறப்பு தொடர்பில் மரண விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் துன் டத்து முஸ்தபா, சமய தேசிய இடைநிலைப்பள்ளியின் மாணவியான ஸாரா கைரினாவின் மரணம் எவ்வாறு சம்பவிக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆராயப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 339 பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த மரண விசாரணையில் சம்பந்தப்பட்ட மாணவியின் இறப்பில் குற்றவியல் கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








