ஷா ஆலாம், பிப்ரவரி.13-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்கு உரிமை குறித்த குற்றச்சாட்டுகளை, முதலில் ஒரு சிறப்புக்குழு விரிவாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தலைமையிலான இந்தக் குழு, புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகார்கள் குறித்து முழுமையான விசாரணையை நடத்தும் என பிரதமர் தெரிவித்தார்.
"தலைமைச் செயலாளர், சட்டத்துறை தலைவர் மற்றும் பொதுச் சேவைத் துறைத் தலைவர் ஆகியோருடன் இணைந்து இந்த வழக்கை மிக நுணுக்கமாக ஆராய்வார். இந்தக் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதா மற்றும் இது எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும்" என்று அன்வார் கூறினார்.
அஸாம் பாக்கி தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுப்பில் செல்ல வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விசாரணைக் குழுவின் ஆரம்பக் கட்ட ஆய்வுக்குப் பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
விசாரணை முடிவதற்குள் இந்தப் புகார்களை ஓர் அழுத்தமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சட்டப்பூர்வமான விசாரணைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.








