கோலாலம்பூர், டிசம்பர்.29-
1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான ஊழல் விசாரணைகளை மூடி மறைத்து, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக்கைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க முயற்சித்த முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் அபாண்டி அலி தண்டிக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் விவகாரங்களில் நஜீப் ரஸாக் எந்தத் தவறும் செய்யவில்லை என அபாண்டி அலி விடுவித்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய செயல் என சார்ல்ஸ் சந்தியாகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வழங்கிய வலுவான ஆதாரங்களை அபாண்டி அலி, வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும், விசாரணையை முடித்து வைத்தது மூலம் உண்மையை மறைக்க முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் 1எம்டிபி தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போதே, உள்நாட்டில் அந்தப் புகார்களை அபாண்டி அலி தள்ளுபடி செய்தது சந்தேகத்திற்குரியது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உண்மையை மறைக்க முயன்றதற்காகவும், ஒரு குற்றவாளியைக் காப்பாற்றப் பார்த்ததற்காகவும் தண்டனைச் சட்டம் 217 மற்றும் 218 ஆகிய பிரிவுகளின் கீழ் அபாண்டி அலி மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அவர் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
நீதித்துறை உயர் பதவியில் இருந்த அபாண்டி அலி, தனது பதவிக்குத் துரோகம் விளைவித்து, ஊழலை மூடி மறைக்க உதவியது தேசத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் என்று ஜசெக.வைச் சேர்ந்த சார்ல்ஸ் சந்தியாகோ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.








