கிழக்குக் கரையோர மாநிலங்களை இணைக்கும் ரயில் இணைப்புத் திட்டமான இ.சி.ஆர்.எல். ரயில் சேவை தொடங்கும் முதல் மாதத்தில், பொருளாதார வகுப்பு பயணச்சீட்டுகளுக்கு 30 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
இந்தச் சலுகை, சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 50 விழுக்காடு கழிவு, 13 முதல் 24 வயது வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் 40 விழுக்காடு கழிவு ஆகியவற்றிலிருந்து தனியானதாகும்.
இ.சி.ஆர்.எல். பயணச்சீட்டுகள் நவம்பர் மத்தியில் விற்பனைக்கு வரும். கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு வரை ஒரு வழிப் பயணக் கட்டணம், இடைநிலைச் சேவைக்கு 125 ரிங்கிட்டிலிருந்தும் விரைவு சேவைக்கு 147 ரிங்கிட்டிலிருந்தும் தொடங்கும். பயணிகள் ரயில் சேவை டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோத்தா பாருவிலிருந்து தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள ரந்தாவ் பாஞ்சாங் வரை இ.சி.ஆர்.எல். திட்டத்தை 32 கிலோமீட்டர் நீட்டிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார். இதற்கான தொழில்நுட்ப மதிப்பீடும் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.








