வெளிப்படைத்தன்மையற்ற அமைப்பை முந்தைய அரசிடமிருந்து தமது அரசாங்கம் பெற்றதாகவும், இதனால் பல தசாப்தங்களாகப் பெருநிறுவனக் குற்றங்களும் சந்தை முறைகேடுகளும் பெரும்பாலும் தடுக்கப்படாமல் இருந்ததாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பல பில்லியன் ரிங்கிட் இழப்புகளை ஏற்படுத்திய பெருநிறுவனக் கையகப்படுத்தல்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமலாக்க நடவடிக்கைகள் போதிய அளவில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
1980, 1990-களில் மல்டி பெர்ப்ர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Multi-Purpose Holdings Bhd) உள்ளிட்ட நிறுவனங்கள், அக்பார் கான் தலைமையிலான குழுவுக்கு விற்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் அப்போதைய செல்வாக்குமிக்க முன்னாள் நிதியமைச்சருடன் தொடர்புடையவை என்றும் அன்வார் குற்றஞ்சாட்டினார்.
மக்களவையில் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அமினுடின் ஹாருன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், மலேசிய தேசிய வங்கியான பேங்க் நெகாரா, பத்திரங்கள் ஆணையம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ் துறை ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஆர்ெச்பி வங்கியின் முன்னாள் நிர்வாகி ரஷிட் ஹுசேன் தனது பங்குகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஃபிலியோ அல்லய்ட் பேங்க் (Phileo Allied Bank) வங்கிகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டார். மேலும், 2023-ஆம் ஆண்டிலிருந்து பெருநிறுவனக் குற்றங்கள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








