Oct 20, 2026
Thisaigal NewsYouTube

ஐந்து வயது சிறுவனைச் சித்திரவதை செய்து காயப்படுத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐந்து வயது சிறுவனைச் சித்திரவதை செய்து காயப்படுத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது குற்றச்சாட்டு

கிள்ளானில் ஐந்து வயது சிறுவனைச் சித்திரவதை செய்து உடல் காயங்களை ஏற்படுத்தியதாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சிறுவனின் சொந்த தாயாரான 37 வயது கே. ஆஷா நந்தினி, சிறுவனின் மாமா 34 வயது கே. தெய்வீந்திரன் மற்றும் சிறுவனின் பாட்டி 60 வயது பி. சிவதேவி ஆகிய மூவரும் நீதிபதி சித்தி நூர் ஷாஃப்ரிடா ஹாஷிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணிக்கு, கிள்ளான் தாமான் ஶ்ரீ அண்டாலாஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தங்களது பராமரிப்பில் இருந்த சிறுவனை மேலும் ஒருவருடன் இணைந்து வேண்டுமென்றே துன்புறுத்தி உடல் காயங்களை ஏற்படுத்தியதாக அந்த மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது சிறுவனுக்கு நான்கு வயது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் சிறுவனின் தாயார், மாமா மற்றும் பாட்டி ஆகியோர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் மூவரும் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை தலா 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

வழக்கு விசாரணை முடியும் வரை சிறுவனுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து, நீதிமன்றம் அந்த மூவருக்கும் ஜாமீன் அனுமதித்தது.

சிறுவனின் தாயாருக்கும், தந்தை தேவேந்திரனுக்கும் இடையில் விவகாரத்து நடைபெற்ற நிலையில், சிறுவனின் பராமரிப்பு உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வேளையில் சிறுவனின் தாயார் குடும்பத்தினர், அந்த பாலகனை துன்புறுத்தி காயம் விளைவித்ததாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை சார்பில் வழக்கை கண்காணிக்கும் வழக்கறிஞர் டி.ரசிக்கா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து வயது சிறுவனைச் சித்திரவதை செய்து காயப்படுத்தியதாக ஒ... | Thisaigal News