ஜோகூர் பாரு, நவம்பர்.18-
ஜோகூர், செனாயில், போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், பணியாற்றி வந்த 31 சிறார்கள் போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை 18 வயது நிரம்பியவர்களாகக் காட்டிக் கொள்ள, மொத்தம் 16 சிறுவர்களும், 15 சிறுமிகளும், தங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளதாக புத்ரா ஜெயா தேசியப் பதிவிலாகாவின் விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் முகமட் கைரு ஃபர்ஹான் முகமட் சாஅட் தெரிவித்தார்.
அவர்களில் சிலர், 12 வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் என்றும், மேலும் சிலரோ பள்ளிக்குச் சென்று கொண்டே பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளனர் என்றும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஃபர்ஹான் குறிப்பிட்டார்.
மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 31 சிறார்களும் 18 வயதிற்குட்பவர்கள் என்று குறிப்பிட்ட ஃபர்ஹான், அவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவராக 14 வயது சிறுவனும் இருப்பதாகத் தெரிவித்தார்.








