பட்டர்வொர்த், செப்டம்பர்.17-
மலேசியா தொடர்ந்து இறையாண்மையோடும், சுதந்திர தேசமாகவும் இருக்க வேண்டுமென்றால், மலேசியர்கள் இனத் தீவிரவாதம் மற்றும் மத வெறி கொண்ட மனப்பான்மையைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பினாங்கு, பட்டர்வொர்த் PICCA அரங்கில் நேற்றிரவு ஆயிரக்கணக்கான மலேசியர்கள் முன்னிலையில் மலேசிய தின உரையாற்றிய அன்வார், மத மற்றும் இன வெறி இரண்டும் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எச்சரித்தார்.
அதே வேளையில், சுதந்திரம் என்பது நிலையான பொருளாதார வளர்ச்சியையும், கலாச்சார அமைப்பையும் உறுதிச் செய்து, நம்மிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது ஆகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் சுதந்திரம் என்பது மிகவும் தனித்துவமானது, ஏனென்றால் அது மற்ற இனங்களின் மீதான அடக்குமுறையில் உருவாக்கப்பட்டதல்ல என்று குறிப்பிட்ட அன்வார், மற்ற இனங்களுடன் வளங்களையும், நீதியையும் பகிர்ந்து கொள்ளும் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.








