கோலாலம்பூர், செப்டம்பர்.08-
ஒரு வீட்டிலிருந்து 169 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கையை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும், அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் முகமட் யூனோஸும் எதிர்க்கவில்லை என்று இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரியின் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் குறித்து இஸ்மாயில் சப்ரியிடம் பல முறை எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தியுள்ளது.
அந்த ரொக்கப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஆகியோர் உரிமைக் கொண்டாடுவதிலிருந்து தடுக்க எஸ்பிஆர்எம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் அந்தப் பணத்தை கோருவதற்கோ அல்லது எஸ்பிஆர்எம் நடவடிக்கையைத் தடுக்கவோ அவ்விருவரும் மேல் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்று நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஹாடி அப்துல் ஜுமாஆட் தெரிவித்தார்.








