கோலாலம்பூர், அக்டோபர்.18-
இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, தீபாவளி திருநாளாக மட்டுமல்லாமல், அது மலேசிய மக்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளக்குகிறது அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த செய்தியானது, மலேசியா மடானி என்ற உணர்வுடன் ஆழமாக தொடர்புடையதாகும். மனிதாபிமானம், நீதி, நலன் ஆகிய மதிப்புகள் எல்லா மக்களுக்கும், இன, மத வேறுபாடு இன்றி, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் அடிப்படையாக விளங்குகின்றன.
மடானி அரசாங்கத்தின் ஒன்றுபட்ட மலேசியா வடிவமைப்பில், தீபாவளி திருநாளானது, இன, மத எல்லைகளை தாண்டி, பல்வகைகளில் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது. இது நமது நாட்டின் நீண்ட நாள் வலிமையாகும் என்று கோபிந்த் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை கோலாலம்பூர், KL Sentral-லில் இலக்கவில் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் கோபிந்த் சிங் டியோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு வருகையுடன் அமைந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய கோபிந்த் சிங், மலேசியாவில் உள்ள இந்திய சமூகம், ஒரு தனி சமூகமல்ல, மாறாக இந்தியர்கள் இந்த நாட்டின் வரலாற்றின் இதயத் துடிப்பாக விளங்குகிறார்கள் என்றார்.
மலேசிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோபிந்த் சிங் துணைவியார் திருமதி சங்கீதா கவுர், தொழில்முனைவர் மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா உட்பட முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.