கோல திரங்கானு, ஜனவரி.19-
திரெங்கானு, பாக்கா (Paka) கடற்கரையில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இராட்சத ஆண் ஆமை ஒன்று இன்று காலையில் கரை ஒதுங்கியது.
இன்று காலை 7.30 மணியளவில் கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 45 வயது முகமட் சுக்ரி காதிர் என்ற தனியார் நிறுவன அதிகாரி இந்த ஆமையைக் கண்டெடுத்தார்.
கரைக்கு அருகில் அசையாமல் கிடந்த அந்த ஆமையை அணுகிப் பார்த்த போது, அது ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதிச் செய்யப்பட்டது. ஆமையின் உடல் வீங்கியும், துர்நாற்றம் வீசியும் காணப்பட்டதால், அது இறந்து சில நாட்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த ஆமையின் தலைப் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. சுமார் ஒரு மீட்டர் நீளம் கொண்ட அந்த ஆமை மிகவும் பெரிய அளவில் இருந்தது.
இதற்கு முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் இதே கடற்கரையில் சிறிய அளவிலான ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் வாழ் உயிரினமான ஆமைகள் இது போன்று காயங்களுடன் உயிரிழந்து கரை ஒதுங்குவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.








