கோலாலம்பூர், அக்டோபர்.26-
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் நேரடி ஒளிபரப்பின் போது, இந்தோனேசியாவின் தற்போதைய அதிபரின் பெயரைக் குறிப்பதில் ஏற்பட்ட தவறுக்காக மலேசிய வானொலி, தொலைக்காட்சி நிலையமான RTM மன்னிப்பு கோரியுள்ளது. அதன் வர்ணனையாளர், தற்போதைய அதிபர் Prabowo Subiantoவிற்குப் பதிலாக, Joko Widodoவின் பெயரைக் குறிப்பிட்டு விட்டார் என்று உள் விசாரணையில் கண்டறியப்பட்டதாக மலேசிய ஒலிபரப்புத் துறையின் பொதுத் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தவறை RTM தீவிரமாகக் கருதுகிறது, மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய அதிபர், அந்நாட்டு அரசாங்கம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் RTM மன்னிப்புக் கேட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு தகவலும் துல்லியமாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதிப்படுத்த, ஆசிரியர் கட்டுப்பாட்டையும், உண்மைச் சரிபார்ப்பையும் RTM மேம்படுத்தும் என்றும் உறுதியளித்துள்ளது.








