Sep 26, 2026
Thisaigal NewsYouTube
திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்
தற்போதைய செய்திகள்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

Share:

சூர்யா – திரிஷா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் முன்னோட்ட அறிமுக விழா, நேற்று இரவு பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் திரையரங்கையே அதிரவைத்தது!

திரையரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கருப்பனின் பிரமாண்ட சிலைக்குச் செலுத்தப்பட்ட மரியாதையுடன் விழா தீப்பிடித்தது. கருப்பனின் ஆயுதமான நீண்ட வெட்டுக்கத்திகளை ஏந்திய ஆண்களும், கருப்பு சேலை அணிந்த பெண்களும் உரிமை மேள இசைக்கு ஏற்ப பக்திப் பரவசத்துடன் விறுவிறுப்பான ஆட்டத்தைப் போட்டனர். உடலெங்கும் திருநீறு அணிந்து, கருப்பனின் நாமத்தை முழங்கியபடி அவர்கள் திரையரங்க வளாகத்திற்குள் நுழைந்த அதிரடி காட்சி, அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான சினிமா பிரபலங்களையும் பிரமுகர்களையும் அப்படியே அசரடித்தது!

சுமார் 40 நிமிடங்கள் ரசிகர்களின் இந்த வெறித்தனமான ஆட்டத்தால் திரையரங்கமே குலுங்கியது. இந்த மாபெரும் கொண்டாட்டத்திற்கு நடுவே, வந்திருந்த அனைவருக்கும் ‘ஹார்ட்வொர்க் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, மலேசிய அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரான எஃப்எஸ்டி எனப்படும் பைவ் ஸ்டார் டிரேடிங் குழுவினர் தடபுடலான இரவு உணவு மற்றும் போப்கோர்ன் வழங்கி முகம் மலர உபசரித்தனர்.

திரையுலக கலைஞர்கள் முன்னிலையில் மைக் பிடித்த எஃப்எஸ்டி நிர்வாக இயக்குநர் டாக்டர் சாய் சுதன், ரசிகர்களின் இந்த அசுரத்தனமான வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்துபோனார். அதேவேளையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மே 14 உலகம் முழுவதும் மற்றும் மலேசியாவில் சில நிர்வாகச் சிக்கல்களால் படம் முதல் நாளில் திரையிடப்படாமல் போனதற்கு ரசிகர்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

திரையரங்கில் ‘திசைகள்’ ஊடகத்திற்கு சாய் சுதன் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், "இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மிக உருக்கமாகப் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார், சூர்யாவும் மிகுந்த கவலையில் உள்ளார். ஆனால், கருப்புசாமியும் சூர்யாவும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்கள். மலேசியாவில் கருப்புசாமி பக்தர்கள் அதிகம். இந்த அசத்தலான இசை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளைப் பார்க்கும்போது அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். இன்று மே 15 ஆம் தேதி படத்திற்கான அனுமதி நிச்சயம் கிடைத்துவிடும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பையும், ஆர்.ஜே. பாலாஜியின் விறுவிறுப்பான இயக்கத்தையும் திரையில் காண மலேசிய ரசிகர்கள் நரம்பு புடைக்கக் காத்திருக்கின்றனர். தடங்கல்களைத் தகர்த்துக்கொண்டு, கருப்பனின் வேட்டை இன்று மே 15 மலேசியத் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்ற அதீத நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related News