Sep 26, 2026
Thisaigal NewsYouTube
4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

Share:

மடானி பொருளாதாரத் திட்டத்தின் கீழ், சிறு தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், 2026-ஆம் ஆண்டில், 5 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நுண்கடன் வசதிகளை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இது குறித்து நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமான சிறு தொழில்முனைவோர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அதிகபட்சமாக 1 லட்சம் ரிங்கிட் வரை கடன் உதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியானது, அமானா இஹ்தியார் மலேசியா, பேங்க் சிம்பானான் நேஷனல், தேக்குன் நேஷனல், மஜ்லிஸ் அமானா ராக்யாட் எனப்படும் மாரா, அக்ரோபேங்க், பேங்க் கெர்ஜசாமா ராக்யாட் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் முகமைகள் மூலம் வழங்கப்படவுள்ளன.

சில திட்டங்களில் ஆண்டுக்கு 3 விழுக்காடு வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினருக்கு எளிதில் நிதி கிடைக்க உதவுவதே அதன் நோக்கமாகும்.

இது குறித்து பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறுகையில், “மூலதன வசதி இல்லாமல் சிரமப்படும் சிறு வியாபாரிகள் மற்றும் நுண்தொழில் முனைவோருக்கு இந்த உதவி நேரடியாக சென்றடைய அனைத்து நிதி நிறுவனங்களும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் விண்ணப்ப நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும், தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கக்கூடாது மற்றும் அனுமதிகள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மடானி பொருளாதாரத் திட்டமானது, கருணை, நீதி மற்றும் சமத்துவம் என்ற மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

நேர்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த நுண்கடன் உதவி சென்றடைய வேண்டும் என நுண்கடன் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் அன்வார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related News