கோலாலம்பூர், ஜூலை.28-
2026 ஆம் ஆண்டு, சுற்றுலா ஆண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு ஊக்குவிப்பு மற்றும் முன்முயற்சி நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அடிப்படை மொழி மற்றும் ஓட்டுநர் நடத்தை விதி மீதான பயிற்சியை டாக்கி ஓட்டுநர்களுக்கு வழங்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டாக்சி தொழில்துறை என்பது வெறும் போக்குவரத்து துறை மட்டும் அல்ல. மாறாக, அது பொதுச் சேவையின் இதயத் துடிப்பாகும். மலேசியாவைப் பற்றி சுற்றுப் பயணிகளிடம் நல்லெண்ணத்தை விதைக்கும் முதல் குட்டித் தூதுவர்கள் டாக்சி ஓட்டுநர்கள் ஆவர்.
எனவே டாக்சியோட்டிகளின் நலனைப் பேணுவதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது, டாக்சி ஒட்டுநர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சொக்சோவின் ஊக்குவிப்புத் தொகையை பத்து விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்கு அரசாங்கம் உயர்த்தியிருப்பதாக அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.
மலேசிய டாக்சி, வாடகைக் கார், சொகுசு வாடகைக் கார் மற்றும் விமான நிலைய டாக்சி சங்கத்தின் மூன்றாவது ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.








