கோலாலம்பூர், அக்டோபர்.08-
இந்தியாவிலிருந்து வரும் ஒப்பந்தம் மற்றும் தள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, வட்டார அளவில், ஒரே மாதிரியான தரநிலைகளை அமைப்பது குறித்து, மலேசியா – இந்தியா இடையில் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற உலக சமூகப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், இந்தியாவின் தொழிலாளர், வேலை வாய்ப்பு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா உடன் இது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தையில், இந்தியத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அதே வேளையில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆசியான் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மலேசியாவும் இந்தியாவும் வலியுறுத்தின.








