யோங் பெங் பள்ளியில் 16 வயது மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைரோல் பைஃசால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் வெளியிட்டுள்ள தகவலில், சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் யோங் பெங் பகுதியில் ஜோகூர் குற்றப்புலனாய்வுத் துறைத் மற்றும் பத்து பஹாட் மாவட்ட போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை சந்தேகநபர் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் அவரை வரும் அக்டோர்பர் 9-ஆம் தேதி வரை, 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, அவர் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் என்றும், இதற்கு முன்பு அவர் மீது எந்த ஒரு குற்றப் பதிவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








