ஷா ஆலாம், ஜனவரி.13-
தனது காதலியான தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக பட்டதாரி நூர் ஃபாரா கார்த்தினியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தின் ஒரு போலீஸ்காரர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறு ஆய்வு செய்யக் கோரி, சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகம் நிரகாரித்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிலாங்கூரில் உள்ள ஊலு பெர்ணம் பகுதியில் நூர் ஃபாரா கார்த்தினி எனும் 25 வயது இளம் பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இக்கொலை தொடர்பாக 28 வயது லான்ஸ் கார்பரல் முஹமட் அலிஃப் மொன்ஜானி என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சட்டத்துறை அலுவலகத்தின் முடிவு குறித்து இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுச் செல்ல துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மைஸாத்தூல் முனிரா ரஹ்மான் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். இந்த விசாரணையில் சுமார் 20 சாட்சிகள் அழைக்கப்பட உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் போலீஸ்காரர் முகமட் அலிஃபிற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட சாத்தியம் உள்ளது.








