நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவும் நெருக்கடியுடன் ஜசெக மற்றும் அரச குடும்பத்தைத் தொடர்புபடுத்தி முகநூலில் பதிவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், நெகிரி செம்பிலான் ஜசெக போலீசில் புகார் செய்துள்ளது.
மாநில ஜசெக தலைவர் ஜே. அருள் குமார், சிரம்பான், மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று புகார் செய்தார்.
‘காலிட் அல் வாலிட்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த முகநூல் பதிவில், ஜசெகவும் நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசாரும் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டிருப்பதாக அருள் குமார் தெரிவித்தார்.
அரச குடும்பத்தை அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்துவது மிகவும் தீவிரமான விவகாரம் என்றும், அரச பரிபாலனம், அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வழக்கமான அரசியல் விமர்சனங்களை ஜசெக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அரச குடும்பத்தை அரசியல் கட்சியுடன் இணைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.
அந்தப் பதிவின் பின்னணியில் உள்ள நபர் யார், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது உள்ளிட்ட விவகாரங்களை போலீஸ் விசாரிக்கட்டும் என்றும் அருள் குமார் தெரிவித்தார்.
பூர்வீக நில உரிமை மாற்றம், சாலைப் பெயர் மாற்றம் உள்ளிட்ட சில விவகாரங்களிலும் ஜசெகவை அந்தப் பதிவு தொடர்புபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.








