செர்டாங், ஆகஸ்ட்.30-
நீண்ட காலமாக நாட்டை பலவீனப்படுத்திய ஊழல், கடத்தல் மற்றும் சட்டவிரோதக் கும்பல்களிடமிருந்து மலேசியா விடுபடும் போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலும், கடத்தலும், சட்டவிரோதச் செயல்களும் பல தசாப்தங்களாக நாட்டின் போராட்டமாக இருந்து வருகிறது. ஆனால், அரசியல் சக்தியின் மூலமே அவற்றை வேரறுத்து வெல்ல முடியும் என்று பிரதமர் கூறினார்.
மலேசியாவின் பலம் அதன் மக்களின் மீள்தன்மையிலும் உள்ளது. அவர்கள் தொடர்ந்து ஊழல் நடைமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
இது போன்ற குற்றங்களை நாம் முழுமையாக வேரறுக்க முடிந்ததா? இன்னும் இல்லை, தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எனவேதான் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் பொதித்த உணர்வு என்பது ஊழல், கடத்தல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்தும் நாட்டை விடுவித்து, தேசத்தைப் பாதுகாப்பதாகும்.
இத்தகைய தாக்கங்களிலிருந்து மக்களை விடுவிப்பதற்கும், தீங்கிழைக்கும் நடைமுறைகளை முற்றாகத் துடைத்தொழிப்பதற்கும் நாம் நெஞ்சுறுதிமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நாளை கொண்டாடப்படவிருக்கும் நாட்டின் 68 ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி இன்று செர்டாங், விவசாயப் பூங்காவில் ஆற்றிய சுதந்திர தின சிறப்புச் செய்தியில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.








