சிரம்பான், நவம்பர்.23-
நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்ட மாட் ரெம்பிட் கும்பல், நேற்று சனிக்கிழமை இரவு காவற்படை நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது பிடிபட்டது. சிரம்பான் - போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையிலும் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 263வது கிலோமீட்டரிலும் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மொத்தம் 114 போக்குவரத்து விதிமீறல் சம்மன்கள் வழங்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இந்தச் சாகசங்களில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதோடு, பந்தயத்திற்காக மாற்றியமைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலைக் கொள்ளையர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 1987 போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேல் நடவடிக்கைக்காகக் கொண்டுச் செல்லப்பட்டன என்றும் அவர் கூறினார்.








