தீபாவளியை முன்னிட்டு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான இடைநிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வீடு வீடாகச் சென்று நிதியுதவி வழங்க ஜசெக. ஏற்பாடு செய்துள்ளது.

வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் தலைமையிலும், பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் முன்னிலையிலும் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்குவதுடன், உதவி தேவைப்படக்கூடிய இந்திய மாணவர்களையும் ஜசெக ஒருபோதும் புறக்கணிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான நிதியுதவி மூன்றாம் தரப்பினர் வழியாகச் செல்லாமல் நேரடியாக வழங்கப்படுவதால், இடைத்தரகர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது என்றும் ஜசெக. கூறியது. மேலும், 2023ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இந்திய சமூகத்தின் ஆதரவை இரு தலைவர்களும் மதிப்பதாகவும், தெலுக் இந்தானில் பல்வேறு இன, சமய மக்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்க ஜசெக உறுதி பூண்டுள்ளது.

அடுத்த பொதுத்தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றம் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றவும் ஜசெக வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








