கோலாலம்பூர், நவம்பர்.02-
அண்மையில் நடைபெற்ற I Lite U நிகழ்வின் செய்தியாளர்கள் கூட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் தாம் கண்டிக்கப்பட்டதைத் திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்வதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
நடந்த தவற்றை ஒரு படிப்பிணையாகத் தாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் இந்நாட்டில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தைத் தொடர்ந்து மதித்து வருவதில் தாம் உறுதி பூண்டு இருப்பதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
ஒரு தலைவர் என்ற முறையில் எந்தவொரு தரப்பினரின் குறிப்பாக மடானி அரசாங்கத்தின் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வரும் ஊடகவியலாளர்களைப் புண்படுத்தும் வகையில் தாம் நடந்து கொண்டதில்லை என்பதையும் ங்கா தெளிவுபடுத்தினார்.
அதே வேளியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தகவல்களை மக்களுக்குக் கொண்டுச் சேர்ப்பதில் ஊடகவியலாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்புக்கு தமது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தமது முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ங்கா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களைப் பணிவன்புடன் சந்திப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். விரைவில் அவர்களைச் சந்திப்பேன் என்று ங்கா தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.








