90 விழுக்காடு சாலை விபத்துகளுக்கு வாகனமோட்டிகள் நடந்து கொள்ளும் முறையால் ஏற்படுகிறது என சாலைப் போக்குவரத்து இலாகாவின் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ லொக்மான் ஜாமான் தெரிவித்துள்ளார்.
சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் அலட்சியமே பல விபத்துகளுக்கு காரணமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
வாகனத்தைச் செலுத்தும் உரிமம் கிடைக்க்பெறும் முன்னரே சாலை விதிமுறைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு விட்டது, ஆகவே, அந்த விதிமுறைகள் மீறப்படுவது குறித்து அவ்வப்போது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒபி பத்தோ ஹாஸ் 2023இல் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 263 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு சாலைப் போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்த கனரக வாகங்கள் மீது 73 ஆயிரத்து 296 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் லொக்மான் ஜாமான் கூறினார்.
வரம்பு மீறிய எடை, தொழில்நுட்பக் குற்றங்கள், வாகனம் செலுத்தும் உரிமம் இல்லாமை, சாலை வரி காலாவதி, காபுறுதி இல்லாமை, சமிக்ஞை விளக்கைப் பின்பற்றாமை, வேக கட்டுப்பாட்டை மீறுதல், வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்கள் அவற்றில் அடங்கும்.
கனரக வாகனமோட்டிகளிடையே சாலை விதிமுறைகளைப் மீறுவது தர்போது அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், 705 வாகனங்களை ஜேபிஜே பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.








