புத்ராஜெயா, மே.27-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புதன்கிழமை காலை புத்ராஜெயாவில் உள்ள மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் ஹரி ராயா ஹாஜி சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டார்.
காலை 7.56 மணியளவில் தனது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுடன் அவர் பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தார்.
அவர்களுக்கு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹைமி வரவேற்பளித்தார்.
இந்நிலையில், அன்வார் தம்பதியினர் பிரதான மண்டபத்திற்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழுகையாளர்களுடன் இணைந்து, அன்வார் தக்பீர் முழக்கத்தில் பங்கேற்றார்.
அதன் பின்னர், மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலின் தலைமை இமாம் டாக்டர் முஹமட் ஸாகுவா ரோட்ஸாலி தலைமையில் ஹரி ராயா ஹாஜி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, “தியாகம் உண்மையான நேர்மையை கோருகிறது” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் அன்வார் பங்கேற்றார்.
தொழுகை நிறைவடைந்த பின்னர், பள்ளிவாசலில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொழுகையாளர்களுடன் அன்வார் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.








