கோலாலம்பூர், ஜூலை.29-
கோலாலம்பூரில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் தனது காதலியுடன் பாலியல் தொடர்பு கொண்ட பின்னர் அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தக் குற்றத்திற்காக ஓர் இந்தியப் பிரஜைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
அத்துடன் அந்த நபருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு டெக்னிஷனான 28 வயது பால்வின்டர் சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டை பிராசிகியூஷன் தரப்பினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸார் அப்துல் ஹாமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அந்த இந்தியப் பிரஜை, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் கோலாலம்புர், புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 36 வயதுடைய தனது காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








