கோலாலம்பூர், ஜூலை.26-
அமைச்சரவையில் கல்வி அமைச்சர் பதவி மீது தாம் மிகுந்த ஆர்வமாக உள்ளதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பதவி தமக்கு வழக்கப்படுமானால் அந்தப் பதவியை ஏற்பதில் தமக்கு மாறுப்பட்ட கருத்து எதுவும் இல்லை. ஆனால், மக்கள் அதனை விரும்புவார்கள் என்று தாம் நினைக்கவில்லை என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய உருமாற்றத்திற்கு கல்வியே முக்கிய அடித்தளமாகும். நாட்டில் ஊழல் கலாச்சாரத்தை வேரறுப்பதற்கு சீர்திருத்தங்கள் மட்டும் போதாது. சீர்திருத்தங்கள் என்பது கல்வியிலிருந்து தொடங்குகிறது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிடம் தாமே பல முறை பேசியிருப்பதாக ரஃபிஸி விளக்கினார்.
எல்லா நிலைகளிலிருந்தும் திருடுவதை விட நேர்மையான வழியைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே உன்னதம் என்ற பண்பியல் மாணவர் பருவத்திலேயே போதிக்கப்பட வேண்டும். அதற்கு கல்வி அமைச்சு முக்கியப் பங்காற்ற முடியும் என்று ரஃபிஸி வலியுறுத்தினார்.








