யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான 53 வயதுடைய அஸ்லிஸான் ஃபாட்ஸ்லி, பகாங் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தித் திட்டம் தொடர்பாக 37.37 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று வியாழக்கிழமை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்த அவர், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினார்.
மேலும், இந்த நிதியானது பகாங் மாநிலம், ஃகம்பாங் பகுதியில் அமைக்கப்படவிருந்த 50 மெகாவாட் அளவிலான சூரிய ஒளிமின்னழுத்த மின் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ஆம் தேதி முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை, யுஐடிஎம் ஷா ஆலாம் கிளையில் அமைந்துள்ள அஃப்ஃபின் பேங்க் பெர்ஹாட் வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக பணம் செலுத்த அவர் அனுமதித்ததாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 409 ஆவது பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையானது நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








