கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்ட நிர்மாணிப்பில் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான தொழிலதிபர் டத்தோ ஶ்ரீ ஜி. ஞானராஜாவினால் இன்று சாட்சியம் அளிக்க இயலவில்லை.
இதன் காரணமாக லிம் குவான் எங்கிற்கு எதிரான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இவ்வழக்கில் முக்கிய சாட்சியான ஞானராஜா, இந்த மாதத் தொடக்கத்தில் தனது வீட்டில் நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைக் சம்பவத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியைக் காரணம் காட்டி, தம்மால் சாட்சியமளிக்க இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தாம் இன்னமும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் ஞானராஜா குறிப்பிட்டார்.
தாம் சாட்சியம் அளிக்க இயலாதது, நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பொருள்படாது. மாறாக, தாம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் தம்முடைய பாதுகாப்பை முதலில் உறுதிச் செய்ய வேண்டிய அவசியத்தில் தாம் இருப்பதாக ஞானராஜா தெரிவித்தார்.
ஞானராஜாவின் பாதுகாப்பை உறுதிச் செய்வது காவல்துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடமையாகும் என்று விசாரணை நீதிபதி அஸுரா அல்வி கூறினார்.
ஞானராஜா மனநிலை சரியில்லாததால், அடுத்த சாட்சியாக விசாரணை அதிகாரி ஸுல்ஹில்மி ரம்லியை அழைக்கவிருப்பதாக அரசுத் தரப்பு துணை அரசு வழக்கறிஞர் மஹாடி அப்துல் ஜுமாஆட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.








