கோலாலம்பூர், ஜனவரி.06-
மலேசியத் தரைப்படையின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் பராமரிப்புத் திட்ட குத்தகைகளைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், ஐந்து நாள் தடுப்புக் காவல் அனுமதியைப் பெற்றுள்ளது.
20 முதல் 60 வயதுக்குட்பட்ட 9 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 17 இயக்குநர்கள், நேற்று இரவு புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இன்று காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 10 ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தரைப்படையின் விநியோகம் மற்றும் பராமரிப்புத் திட்ட குத்தகைகளைக் கைப்பற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








