Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் முன்னாள் செயலாளர் ஷாம்சுல், வர்த்தகர் ஆல்பெர்ட் தே உட்பட மூவருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

அன்வாரின் முன்னாள் செயலாளர் ஷாம்சுல், வர்த்தகர் ஆல்பெர்ட் தே உட்பட மூவருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தொடர்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின், வர்த்தகர் ஆல்பெர்ட் தே மற்றும் ஷாம்சுலின் பினாமி என்று கூறப்படும் பெண்மணி ஆகிய மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

சோஃபியா ரினி புயோங் பெண்மணி நேற்று புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் திங்கட்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றுள்ளது.

ஷாம்சுல் இஸ்கண்டார் இன்று மதியம் 12.30 மணியளவில் எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தகர் ஆல்பெர்ட் தே இன்று காலை 10.30 மணியளவில் பூச்சோங்கில் உள்ள அவரின் வீட்டில் அதிகாரிகள் கைது செய்ததாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

ஷாம்சூல் இஸ்கண்டாரும் ஆல்பெர்ட் தேவும் நாளை சனிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களைத் தடுப்புக் காவல்க்ல் வைப்பதற்கான அனுமதி பெறப்படும் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரும் எஸ்பிஆர் எம்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

வர்த்தகர் ஆல்பெர்ட் தே வரும் டிசம்பர் முதல் தேதி எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். எனினும் இந்த வழக்கை விரைவில் கையாள வேண்டிய அவசியம் இருப்பதால் அவரை முன்கூட்டியே எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் ஆஜராகும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் நிராகரித்து விட்டார். அத்துடன் எஸ்பிஆர்எம்முடன் ஒத்துழைக்க மறுத்து விட்டார். எனவே எஸ்பிஆர்எம் இன்று அவரின் வீட்டிற்குச் சென்று கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

இவ்வழக்கு விசாரணை சட்டத்துக்கு உட்பட்டு, நிபுணத்துவ முறையில் நடத்தப்படும் என்று டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதி அளித்தார்.

Related News

அன்வாரின் முன்னாள் செயலாளர் ஷாம்சுல், வர்த்தகர் ஆல்பெர்ட்... | Thisaigal News