கோலாலம்பூர், ஜனவரி.20-
பொதுச் சேவைத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட MyGOV மலேசியா செயலி, 2025 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி அதன் முதற்கட்ட பதிப்பு வெளியானதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பாதுகாப்பான மற்றும் எளிமையான இத்தளத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இந்த வரவேற்பு காட்டுகிறது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தற்போது இந்தச் செயலியில் 13 அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 38 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அரசு சேவைகளுக்கான நேரடி இணைப்புகள் மற்றும் சரிபார்ப்பு வசதிகள் இதில் உள்ளன. கட்டணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்த ஒருங்கிணைப்புப் பணி தொடர்ந்து கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கோபிந்த் சிங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசுச் செயலிகளை மாற்றாமல், அவற்றின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் நிர்வாகச் சிக்கல்களைக் குறைக்கவும் ‘Agentic AI’ எனப்படும் தன்னாட்சி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இலக்கவியல் அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.








