கோலாலம்பூர், செப்டம்பர்.21-
மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க, பொதுச் சேவை ஊழியர்கள் தங்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுச் சேவை ஊழியர்கள் பேரவையான கியூபெக்ஸ் எச்சரித்துள்ளது. ஒரு சில தனிநபர்களாலும் அமைப்புகளாலும் அரசாங்கத் துறையில் ஏற்படும் ஊழல், மோசடி போன்ற பிரச்சினைகள் உடனடியாக களையப்பட வேண்டும் என அதன் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தலைவர்கள் தங்கள் துறைகளில் உள்ள குறைகளை உடனடியாகப் பொது வெளியில் அம்பலப்படுத்தாமல், முதலில் அதைச் சரி செய்ய முயற்சிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பொதுச் சேவை ஊழியர்களின் நற்பெயரைக் காக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில், ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் கியூபெக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.








