கோலாலம்பூர், ஜனவரி.22-
இராணுவ முகாம்களில் நிலவுவதாகக் கூறப்படும் ‘யேயே’ (Yeye) எனும் ஒழுக்கக்கேடான கலாச்சாரம் குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கெதேரே நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான டத்தோ கிளிர் முகமது நோர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அந்த முன்னாள் மேஜர் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
"முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது சில பொறுப்பற்றவர்களின் நடத்தை; மிகவும் வெட்கக்கேடானது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். நான் பணியில் இருந்தபோது இத்தகைய செயல்கள் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு அறை கொடுத்திருப்பேன். என்னிடம் விளையாட வேண்டாம், ஒழுக்கக்கேடான செயல்களை நான் வெறுக்கிறேன்." என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிக ஆவேசமாக கூறினார்.
இராணுவத்தில் அநாகரீகமான விருந்துகள் மற்றும் முறையற்ற தொடர்புகளைக் குறிக்க 'யேயே' கலாச்சாரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒட்டுமொத்த இராணுவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும், இராணுவ வீரர்கள் எப்போதும் நாட்டிற்கும் தலைவர்களுக்கும் விசுவாசமாக இருக்கவே பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் இராணுவ முகாம்களில் வெளிநபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் நடப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய புகார்களைத் தொடர்ந்து, தற்காப்பு அமைச்சு இது குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கி இருப்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.








