கோலாலம்பூர், அக்டோபர்.19-
நாட்டில் தற்போது நிலவும் அமைதியும் நிலைத்தன்மையும், தற்காப்புத் திறன்களுக்கான தயார் நிலையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு ஒரு போதும் காரணமாகி விடக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலுவாக வலியுறுத்தியுள்ளார். முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போது சில நாடுகள் தற்காப்புத் தயார் நிலையைக் குறைத்ததே மிகப் பெரிய வரலாற்றுத் தவறு என்றும், எனவே பொருளாதாரத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் அதே வேளையில், இராணுவ ஒழுக்கத்தையும் திறன்களையும் மேம்படுத்துவதை நாம் மறக்கக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார். தற்காப்புத் துறை அமைச்சரின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், இராணுவத்தினரின் வீட்டுவசதி மேம்பாடு உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, சாதனை அளவிலான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்றும் அன்வார் பாராட்டினார்.