கோலாலம்பூர், ஜனவரி.11-
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC), எலான் மாஸ்க்கிற்குச் சொந்தமான 'Grok AI' தொழில்நுட்பத்தை மலேசியாவில் பயன்படுத்துவதற்கு இன்று முதல் தற்காலிகத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளின் பெயரில் ஆபாசமான, ஆபாசமாகத் திருத்தப்பட்ட Deepfake புகைப்படங்களை உருவாக்க இந்த AI தளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கத் தவறியதே இந்தத் தடைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இது குறித்து X Corp, xAI நிறுவனங்களுக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் வழங்கிய விளக்கம் போதுமானதாக இல்லை என்றும், சட்டவிதி 233-ன் கீழ் இது மிகப் பெரிய விதிமீறல் என்றும் ஆணையம் சாடியுள்ளது. தொழில்நுட்ப பாதுகாப்புகளைப் பலப்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இணைய உலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இது போன்ற சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கண்டால் உடனடியாக காவற்படையிடமோ அல்லது ஆணையத்திடமோ புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








