முன்னாள் நிதியமைச்சர் மறைந்த துன் டாயிம் ஜைனுடினின் மகள் அஸ்னிடா, சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சட்டப்பிரிவு 36-ன் கீழ் அஸ்னிடா மீது நாளை ஜாலான் துத்தா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளதை அவரது வழக்கறிஞர் யூ யிங் யிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கிய எழுத்துப்பூர்வ நோட்டீஸின்படி தனது சொத்துக்களை முறையாக அறிவிக்கத் தவறியதே அவர் மீதான புகாராகும்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இன்று காலை 10 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்குச் சென்ற அஸ்னிடாவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
துன் டாயிமின் மற்ற மூன்று பிள்ளைகளான முகமது வீரா டானி, முகம்மது அமீர் மற்றும் முகம்மது அமீன் ஆகியோரும் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக ஏற்கனவே ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








