செராஸ், ஆகஸ்ட்.01
வழிபறிக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஜுலை 22 ஆம் தேதி செராஸ், 9 ஆவது மைல், தாமான் பெருமாஹான் வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது. பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவரின் கைப்பையைப் பறிக்க அந்த ஆடவர் முயற்சித்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
அந்த ஆடவரின் உடலில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் உடலில் ஏற்பட்ட கடும் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த ஆடவரைத் தாக்கியதாக நம்பப்படும் எட்டுப் பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முடிவு தெரியும் வரையில் அந்த எண்மரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.








