கோலாலம்பூர், நவம்பர்.12-
மலேசியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையில், புதிதாக எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 விழுக்காடு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, மொத்தம் 3,185 பேர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியதாக குறிப்பிட்ட அவர், 2023-ஆம் ஆண்டின் 3,222 எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவு என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கடந்த 2024-ம் ஆண்டு நிலவரப்படி, ஓரினச் சேர்க்கை மற்றும் இரு பாலின உறவுகள் மூலம் 2,037 பேர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், 2023-ஆண்டு இதன் எண்ணிக்கை 1995-ஆக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அது 2 விழுக்காடு அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே வேளையில், 2024-ஆம் ஆண்டில், ஊசியைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 77 பேர் என்றும், 2023-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 87 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.








